ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக | முதலமைச்சர் பதவி யாருக்கு?
ஒடிசா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் 4 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இங்கு 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன. அங்கு பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், பாஜக 78 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேபோல், ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் பிரணாப் பிரகாஷ் தாஸை எதிர்த்து போட்டியிட்ட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், முதலமைச்சர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஷ்வரில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்த மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளாக 5 முறை முதலமைச்சராக பதவி வகித்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இந்த முறை தோல்வியைத் தழுவியது.