தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒடிசா மாநில அரசு கலைப்பு!
ஒடிசாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளநிலையில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டார்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவே எக்ஸிட் போல் முடிவுகளும் வெளியாகின. அந்த முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த இந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.
இதில் அருணாச்சலப் பிரதேசத்திற்கும், சிக்கிம் மாநிலத்திற்கும் நேற்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.
நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 2000-த்தில் இருந்து நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறர். ஐந்து முறை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இம்முறையும் வென்றால் வெற்றிகரமாக 6வது முறையாகவும் நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்பார் என்பது குறிப்பிடதக்கது.