#T20WomenWorldCup -ஐ வெல்லப்போவது யார்? - தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயத்த நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 3-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதின. அணிகள் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 5 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகளின் முடிவில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 2 இடங்களை பிடித்ததன் அடிப்படையில் அவை அரையிறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியது.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை நியூசிலாந்து வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதையும் படியுங்கள் : YOLO | #Kanguva திரைப்படத்தின் 2வது பாடல் - புதிய போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!
இந்நிலையில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே, நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். ப்ரூக் ஹால்லிடே 38 ரன்களும், சூஸி பேட்ஸ் 32 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் நன்குலுலேகோ மிலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அயபோங்கா காஹா, ச்லோ டிரையான் மற்றும் நாடைன் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.