NZ vs PAK | தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி... டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று (பிப்.19) முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.
இதில் ஆடவுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
முதல் நாளான இன்று (பிப்.19) பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து வருகின்றனர்.