செல்போன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகள் - கட்டுப்படுத்த கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தல்!
அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் வகையில் செல்போன்களில் தொடர்ந்து வரும் வணிகரீதியான அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:
செல்போன்கள் தகவல் தொடர்பில் எந்தளவுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு தொல்லை தரும் சாதனமாகவும் மாறியிருக்கிறது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வணிக நோக்கத்திலான அழைப்புகள் தொடர்ச்சியாக வந்து வாடிக்கையாளர்களை எரிச்சலுக்கும் சங்கடத்திற்கும் ஆளாக்குகின்றன.
இந்தத் தொல்லையிலிருந்து வாடிக்கையாளர்களைக் காக்கும் வகையில், 2007ம் ஆண்டு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ‘தேவையில்லாமல் அழைத்து தொல்லைப்படுத்த வேண்டாம்’ ( DO NOT DISTURB ) என்ற விருப்பத்தைப் பதிவு செய்யும் வகையில் ஒரு பதிவேட்டை ஆரம்பித்தது. செல்போன் பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்களில் 74 சதவிகிதம் பேர் இப்படி தொல்லையைத் தவிர்க்க கோரிக்கை வைத்திருந்ததாக ஆவணங்கள் சொல்கின்றன.
ஆனாலும் இத்தகைய தொல்லை அழைப்புகள் குறைந்ததில்லை. அதனை தொடர்ந்து, மிக அதிக அளவிலான எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து வருகின்றன. அப்படியானால் இத்தகைய அழைப்புகளை கட்டுப்படுத்த மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்றுதான் அர்த்தம். பதிவு பெறாத ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செய்யும் டெலி மார்க்கெட்டிங்தான் இத்தகைய அழைப்புகளில் பிரதான இடம்பிடிக்கின்றன.
இது தொடர்பாக நாடு முழுக்க இருந்து 9,252 பேர் கலந்துகொண்ட ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் 51 சதவிகிதம் பேர் தங்களுக்கு கடனுதவி, கடன் அட்டை வழங்குதல் போன்ற நிதிச் சேவைகள் தொடர்பாக அழைப்புகள் வருவதாகவும்; 29 சதவிகிதம் பேர் தங்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான அழைப்புகள் வருவதாகவும் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையின் வீரியத்தை இந்த சர்வே முடிவுகளே சொல்லும்.
டிராய் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் வகையில், தேவையற்ற அழைப்பை விரும்பாதவர்களுக்கான பதிவேட்டை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், பதிவுபெறாத ஆன்லைன் மற்றும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த போதிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தேவையற்ற அழைப்புகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் டிராயிடம் புகார் தெரிவிப்பதில் இப்போது பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை சரிப்படுத்தி புகார் தெரிவிக்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.