மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 - 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கி வைத்தார். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கும் இந்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இத்திட்டத்திற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில், பயனாளி மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேற்று இரவு முதலே ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.