”இனி நம்ம பையன் Yellow” - சஞ்சு சாம்சனை வரவேற்று சிறப்பு வீடியோ வெளியிட்ட சென்னை அணி
19 ஆவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அடுத்த மாதம் வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் வீரர்கள் அணிமாற்றம் செய்யும் டிரேடிங் முறையும் உண்டு. அந்த வகையில் லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூர் மற்றும் குஜராத் அணி வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஆகிய இருவரையும் முறையே 2 கோடி மற்றும் ரூ.2.6 கோடி தொகைகளுக்கு மும்பை அணி வாங்கியது.
இதனிடையே, சென்னை அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு அளித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்று கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவிந்திர ஜடாஜாவை சென்னை அணி விட்டு தராது என்று கூறப்பட்டது.
ஆனால் சென்னை அணியானது, ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை முறையே தலா 14 மற்றும் 2 கோடிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது. இது சென்னை அணி ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சஞ்சு சாம்சனை வரவேற்றுள்ளது. மேலும் அதில் ‘வரவேண்டிய நேரத்துல கரெக்ட் ஆ வருவேன்’ எனவும் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சஞ்சு சேம்சன் மற்றும் மலையாள நடிகர் பாசில் ஜோசப் ஆகியோர் தோன்றியுள்ளனர்.