முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட இதுவே சரியான தருணம் - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன்!
முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட இதுவே சரியான தருணம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 'தமிழகத்தின் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு இலக்கு நிர்ணயிக்கும் போது, அனைவரும் சேர்ந்து பணியாற்றி அதற்காக உழைப்பார்கள். முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட இதுவே சரியான தருணம். சுற்றுலாத் துறையில் அதிக தொழில் வாய்ப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பொறியாளர்களும், உயர் கல்வி படித்தவர்களும் இருக்கின்றனர். எனவே, நாம் உற்பத்தித் துறை மட்டுமின்றி இதர துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.
இதையும் படியுங்கள்: தொடர் கனமழை எதிரொலி – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதாவது:
சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி 40 சதவீதம். ஆனால், இந்தியாவின் ஏற்றுமதி 4 சதவீதமாக உள்ளது. சீனாவின் அளவு குறையும் போது, அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.
கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டில் தொழில் துறை மற்றும் முதலீட்டுக்கான சூழல் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். ஏராளமான முதலீடுகள் வருகின்றன. தமிழ்நாட்டில் 30,000-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்படுவது இதுவரை நிகழாத ஒன்று. இதுபோன்ற அம்சங்களால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியமானதாக இருக்கும்.
தமிழ்நாடு அரசின் கடன் சுமையில் மூன்றில் ஒரு பங்கு கடன் மின்சார வாரியம் சார்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டின் அதிக கடன் சுமை, மின்சார வாரியக் கடன்கள் போன்றவை எதிர்மறையான செய்திகளாக இருக்கின்றன. அதே நேரத்தில், வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியிருப்பது சாதகமாக உள்ளது என்றார்.