இனி அமெரிக்காவிலும் ‘தீபாவளி’ விடுமுறை..
நியூ யார்க்கில் உள்ள பொது பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கும் சட்டத்தில் அந்நாட்டு மாநில ஆளுநர் கையெழுத்திட்டார்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தீபாவளி பண்டிகை, வடமாநிலங்களில் மட்டும் 5 நாள் விழாவாக கொண்டாடபடுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா நாட்டின் நியூ யார்க் மாநில ஆளுநர் கேத்தலீன் ஹோக்கல், தீபாவளி அன்று நியூ யார்க்கில் உள்ள பொது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிற நியூ யார்க் மாகாணத்தில் இந்தியர்களின் விழாவான தீபாவளிக்கு விடுமுறை அறிவித்திருப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாதக்கணக்கின்படி எட்டாவது மாதம் 15-ம் நாள் இந்த விடுமுறை அளிக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள திருவிழாக்களை நமது மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கும் கொண்டாடுவதற்குமான வாய்ப்பாக இது அமையும் என ஹோக்கல் தெரிவித்துள்ளார். நியூ யார்க் மாகாணத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
அமெரிக்காவின் பெரிய கல்வி மாகாணங்களில் நியூ யார்க்கும் ஒன்று. அம்மாநில சட்டபேரவை உறுப்பினரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஜெனிஃபர் ராஜ்குமார் முன்னெடுத்த இந்த மசோதா தற்போது ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.