காரில் ஹெல்மெட் அணியாதது ஏன்? பத்திரிக்கையாளருக்கு போலீஸ் அபராதம்!
உத்தரப் பிரதேசத்தில் காரில் சென்றவர் ஹெல்மெட் அணியவில்லை என்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசதம் ராம்பூரில் வசித்து வருகிறார் பத்திரிக்கையாளர் துஷார் சக்சேனா. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராம்பூரில் இருந்து 188 கிமீ தொலைவில் உள்ள கௌதம் புத் நகர் மாவட்டத்திற்கு காரில் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் இருந்ததாகக் கூறி, துஷார் சக்சேனாக்கு ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து காவல்துறையினர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த இவர் "நான் என்சிஆர் பகுதிக்கு எனது காரை ஓட்டியதில்லை. காருக்குள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏதேனும் விதி இருந்தால், அதிகாரிகள் அதை எனக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும்” என சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். பணம் கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால் தற்போது வரை இந்த வழக்கு தொடர்கிறது. தன்மீதான வழக்கை நொய்டா போலீஸ் ரத்து செய்யும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.