“ஒரு ஊரையே காணவில்லை...ஆற்றின் பாதையே மாறிவிட்டது...” - கண்ணீர் தேசமான 'கடவுளின் தேசம்'!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எறுவழஞ்சி ஆற்றங்கரையோரம் இருந்த கிராமத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதிகள், இங்கிருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் பாதி, மற்றும் அங்கிருந்த 24 குழந்தைகள் காணாமல் போனதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.