தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் - போர் மூளும் அபாயம்..!
தென் கொரியாவின் யோன்பியொங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனிடையே தென் கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து, கொரிய தீபகற்பத்தில் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இது போன்ற செயல்கள் வட கொரியாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் வட கொரியாவின் ஆயுத பலங்களை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தென் கொரியாவின் யோன்பியொங் தீவு பகுதியில் இன்று வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 200 பீரங்கி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டதாக அப்பகுதியில் உள்ள தென் கொரிய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : லட்சத்தீவுகள் குறித்து ட்வீட்.... நெட்டிசன்களை உற்சாகமூட்டிய பிரதமர் மோடி...!
வட கொரியாவின் இந்த தாக்குதலை அடுத்து, யோன்பியொங் தீவு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி தென் கொரிய ராணுவம் வலியுறுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.