கொரியாவில் மீண்டும் பதற்றம் - வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னையால் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வடகொரியா அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான்.
இந்த நிலையில், புத்தாண்டு பிறந்து சில தினங்களிலேயே வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருப்பது உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து நேற்று ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணித்து ஜப்பான் கடற்கரைப் பகுதியின் அருகே விழுந்ததாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக ஏவுகணைச் சோதனை நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் வருகை தந்துள்ள நிலையில், வடகொரியா தற்போது ஏவுகணைச் சோதனையை நடத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.