மஹ்மூத் தர்வீஷின் "நாடோடிக் கட்டில்" - நூல் அறிமுகம்
புகழ்பெற்ற ஃபாலஸ்தீன கவிஞரான மஹ்மூத் தர்வீஷின் "நாடோடிக் கட்டில்" எனும் நூல் குறித்த அறிமுகத்தை காணலாம்....
விடுதலைக்கான போராட்ட வடிவங்களில் சொற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போராட்ட வீரியமிக்க சில சொற்கள் தான் ஒரு நாட்டின் விடுதலையை தீர்மானிக்கிறது. அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் ஜூனியரின் “I have a Dream - எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்கிற உரையின் தாக்கம் விடுதலை போராட்ட இயக்கத்தில் பயணிக்கும் உள்ளங்களில் இன்னமும் கணன்று கொண்டிருக்கிறது.
இதே போல லத்தீன் அமெரிக்க நாடான சுதந்திர கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உரைகளும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது மட்டுமின்றி அவை அதே வெப்பத்தோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. உண்ண உணவோ, இருப்பிடமோ, சுதந்திரமான நடமாட்டமோ என எதற்கும் வழியின்றி காடுகளுக்குள் கொரில்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை சொற்களாக அவர் உதிர்த்தார். “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என அவர் முழங்கினார். அவரின் வீரியமிக்க சொற்களைப் போலவே வரலாறு அவரை விடுதலை செய்தது மட்டுமல்லாமல் ஃபிடலை எப்போதும் கொண்டாட வழிவகை செய்தது.
”நான் வாழும் வரை என் சொற்களும் வாழும்...
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாகவும் ஆயுதமாகவும் அது என்றும் இருக்கும்”.
பாலஸ்தீனையும், அதன் வலியையும் தனது கவிதைகளின் வழியாக உலகிற்கு காட்டிய மிக முக்கியமான கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார். 7 வயதிலேயே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக தர்வீஷ் இடம் பெயர்ந்து வெளியேற நேர்ந்தது. அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது.
சிறு வயதிலேயே இன அழிப்பின் மோசமான கொடூரத்தை நேரில் பார்த்தவர் தர்வீஷ் . அதனால் தான் என்னவோ 1950-ம் ஆண்டிலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கினார். தர்வீஷின் கவிதைகள் கோபத்தையும், ஆவேசத்தையும், வலியையும் ஒருங்கே வெளிப்படுத்தின. அந்த கவிதைகள் மிகப்பெரும் அதிர்வுகளை உண்டாக்கத் துவங்கின. ”எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்” என்பதே அவரது தத்துவமாக இருந்தது.
ஜாகிர் ஹுசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை, அதன் வீச்சைச் சிறப்பாகத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார். நவீன அரபு இலக்கியம் இவர் மூலம் தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகிறது. மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இத்தொகுப்பு முக்கியமான ஒன்றாகும்.
- ச.அகமது , நியூஸ் 7 தமிழ்