#NobelPrize | மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2024-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவு தினமான டிச 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில், நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பு இன்று (அக். 7) வெளியிட்டுள்ளது. அதன்படி, மைக்ரோ ஆர்என்ஏ-வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை (அக். 8) தொடர்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.