இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது - அதிபர் டொனால்ட் டிரம்ப்!
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஸ்மார்ட்போன், கணினி, மருந்துகள், சில வகை உலோகங்கள், கனிமங்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளி, நகைகள், வைரங்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.