“இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” - நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!
“தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது” என எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக
கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளது எனக்கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,
“சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை
உரிமையாளராகிறார். பதிப்புரிமை உரிமைதாரரான பட தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம்
செய்து 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜாவுடன்
எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
வரும்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளரிடம் பதிப்புரிமையை வழங்கி விட்டார். உரிமையை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில், இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது” என வாதிட்டார்.
எக்கோ தரப்பு வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து இளையராஜா தரப்பு வாதங்களுக்காக
விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.