"களங்கம் ஏற்படுத்தும் விதமாக யாரும் செயல்படக்கூடாது - தவெக தலைமை அறிவுறுத்தல்!
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழகத்தின் இன்றைய ஒரே நம்பிக்கையாக நமது தமிழக வெற்றிக் கழகம் களத்தில் பணியாற்றி வருகிறது. நமது கழகத்திற்குத் தமிழக மக்கள் கொடுத்து வரும் அளப்பரிய ஆதரவும், அளவு கடந்த அன்பும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையும், காலம் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுக் கடமையும் சொற்களில் சொல்லிட இயலாதவை. அதனால் தான். நாம் அனைவரும் நம்முடைய மாபெரும் பொறுப்பை உணர்ந்து மக்களுக்காகச் செயலாற்றி வருகிறோம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நமது கழகத் தலைவர் அவர்கள், உறுதியான கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும், மக்களின் நம்பிக்கையையும் மட்டுமே ஏற்றுக் களத்தில் நிற்கிறார். அவர் தலைமையில், வரும் தேர்தலை மக்கள் சக்தியோடு நாம் எதிர்கொள்ளப் போகிறோம். அந்த வகையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முதல், நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் வரை அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தங்கள் கழகப் பணிகளின் போது, கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
1. தற்போது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலம். கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டிய வேளை. கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகக் கழகத் தோழர்கள் ஒருபோதும் செயல்படக் கூடாது.
2. தேர்தல் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளுக்காக வீடு வீடாகச் செல்லும் போது, தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ள பரப்புரை வாசகங்கள் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட ஸ்டிக்கர் மட்டுமே ஒட்ட வேண்டும். அவற்றையே சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரப்புரைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். தலைமைக் கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படாத, அனுமதிக்கப்படாத வேறு வாசகங்களையோ புகைப்படத்தையோ, ஸ்டிக்கராகவோ, வேறு வடிவங்களிலோ, கழக நிகழ்ச்சிகளுக்காக, பரப்புரைக்காக அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது.
3. தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள். கொள்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள். தெருமுனைக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது. தனிப்பட்ட விதத்திலும் தலைமைக் கழகத்தால் பிரத்தியேகமாகத் தேர்தல் பரப்புரை சார்ந்து அங்கீகரிக்கப்படாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலச்சினைகள் / வாசகங்களோடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், கழகத் தலைவர் சார்ந்த வாசகங்கள் மற்றும் படங்களைத் தவிர்த்து வேறு வாசகங்களையோ, புகைப்படங்களையோ கழக நிகழ்ச்சிகள் சார்ந்தோ, தேர்தல் பரப்புரை சார்ந்தோ பயன்படுத்தக் கூடாது. மேலும் பரப்புரை தொடர்பான அனைத்திலும் கட்டுப்பாட்டுடன் இந்த நடைமுறையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4. கழகத்தின் அனைத்து நிலை அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்படும் உள்ளரங்கு மற்றும் பொதுவெளி, பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின் போது, கழக நிர்வாகிகளும் தோழர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
5. கழகத் தோழர்கள். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் போது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல். பொதுமக்களின் உற்ற தோழர்களாகச் செயல்பட வேண்டும். மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்கள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் மீது கழகத் தோழர்களாகிய நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அளவில்லாப் பேரன்பை நமது கழகத் தலைவர் அவர்கள் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறார். நம் அனைவர் மீதும் எக்காலத்திலும் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்த்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி, புதிய வரலாறு படைப்போம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.