"தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 10,000 பேர் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் நல்வாழ்வு துறையில் தினம்தோறும் பல்வேறு வகையான புதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனை ஒரு நூற்றாண்டைக் கடந்த பழமை வாய்ந்த மருத்துவமனையாகும்.
இந்த மருத்துவமனையில் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தினம் தோறும் 1500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 ஆக உள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்தியய
மருத்துவத்துறை அமைச்சர் நட்டா இந்தியாவில் குரங்கமை இல்லை என்று
அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்.
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்கவில்லை. தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும். போலி மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.