"எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் யாரும் கட்சி நடத்த முடியாது" - #EPS பேச்சு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் இன்னிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடினர். இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள கண்ணகி நகரில் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மேலும், ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது,
"இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். சுமார் 10 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தவர். எதிர்க்கட்சிகள் எல்லாம் பாராட்டக்கூடிய ஒரே கட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான். எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் எவரும் கட்சியை நடத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்.
அவர் மக்களுடன் மக்களாக இருந்து மக்களின் குறைகளை தெரிந்துகொண்டார். முதலமைச்சராக சட்டமன்றத்தில் நுழைவேன் என்ற எம்.ஜி.ஆரின் சபதத்தை மக்கள் 1977-ல் நிறைவேற்றினர். ஏழைகளை நேசித்தார், தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தார்.
இன்றைக்கு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். எந்தக் கட்சியிலும் தொண்டராக இருந்து பதவிக்கு வர முடியாது. ஆனால் நான் தொண்டனாக இருந்து தற்போது இந்த பதவிக்கு வந்திருக்கிறேன்.
சூழ்ச்சி செய்யப்பட்டு அதிமுக மீது வழக்குகள் தொடரப்படுகிறது. நமக்கு சோதனைகள் ஏற்பட்டுள்ளது. அதை எல்லாம் கடந்து 2026 இல் அதிமுக ஆட்சி மலரும். கொரோனா காலகட்டத்தில் மக்களின் உயிரை காக்க நடவடிக்கை எடுத்தோம். சத்தான உணவு கொடுத்தோம், கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்.
சென்னையின் மீண்டும் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். 11 மாதம் விலையில்லாத அரிசி, சர்க்கரை, எண்ணெய் அனைத்தும் இலவசமாக கொடுத்தோம். திமுக கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தவன், அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் கொடுக்கப்பட்டது.
2000 அம்மா மெடிக்கல் கிளினிக் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சி வந்த உடனே அதனை மூடிவிட்டார்கள். இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முதலிடம் இருப்பதற்கு காரணம் அதிமுக தான். தாலிக்கு தங்கம் திட்டத்தை கொடுத்தோம் அதையும் நிறுத்திவிட்டார்கள்.அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வழக்கில் யார் அந்த சார்? என்று நாங்கள் கேட்கும் போது அமைச்சர்கள் கொந்தளிக்கிறார்கள்."
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.