“இந்திய வரலாற்றில் இதுவரை எந்த அரசும் கல்வித்துறையில் பழிவாங்கல் செய்ததில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 2 ஆயிரத்து 152 கோடி நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில், தமிழ்நாடு இணைய வேண்டும் என்ற நிபந்தனையைத் ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தின் கீழ் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர்.
இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு இருந்தது இல்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிள்ளார்.