Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் - வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுன்சிலர்கள்!

03:29 PM Jan 11, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 44 வார்டுகளில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளை சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வருகின்றனர்.  இதனிடயே மேயர் சரவணனுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு மாமன்ற கூட்டங்களிலும் எதிரொலித்தது.

கடந்த டிசம்பர் 6-ம் தேதி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை என 38 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிற்கு கடிதம் அனுப்பினர். அனைத்து கையெழுத்தும் சரிபார்க்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடந்த டிச. 27-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கூட்டத்திற்கு பிறகும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்வதாக 30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

இதனையடுத்து அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் வெவ்வேறு வாகனங்களில் விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேயர் மற்றும் 3 மாமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகவும், கவுன்சிலர்கள் ஒரு குழு என 3 குழுக்களாக விருதுநகர் புறப்பட்டு சென்றனர்.

அதிமுக உறுப்பினர்கள் தவிர அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர் அறிவித்த பிறகு அவர்கள் திருநெல்வேலி அழைத்து வரப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.

Tags :
#municipal corporationAbdul WahabDMKMayorMayor SaravananNellaiNews7Tamilnews7TamilUpdatesTirunelveli
Advertisement
Next Article