திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்..சாமி தரிசனத்திற்கு 6 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி பௌர்ணமியையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி
வருகிறது. இங்கு திருவிழா காலங்கள் தவிர்த்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று புரட்டாசி மாத
பௌர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
புரட்டாசி பௌர்ணமியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும் , உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள், கோயிலில் நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமியை
தரிசனம் செய்தனர்.
குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து, பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தினர். மேலும் விடிய விடிய விழித்திருந்து நிலாவை பார்த்து பூஜை செய்து, உணவு உண்டு அங்கேயே உறங்கினர். 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.