நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை! -நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்...
நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட SDG Index ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள், வறுமையை ஒழித்து, பூமியை பாதுகாக்கவும் அனைத்து மக்களையும் அமைதியாகவும் வளமாகவும் வாழ வைக்கும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2015ஆம் ஆண்டு நிலையான வளரச்சி குறியீட்டு இலக்குகள் வகுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் இது ஏற்று கொள்ளப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப சமூக, பொருளாதார ரீதியாக இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், 2023-24ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது. அதன்படி நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் SDG Index ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வறுமை ஒழிப்பு என்பது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் சவாலாகத் தொடர்கிறது. ஏராளமான வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்திய பிறகும், பல்வேறு பகுதிகளில் வறுமை நீடித்தது.
இந்த நிலையில் 2023-24 ஆண்டுக்கான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 2023-24-க்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.