நிபா வைரஸ் பரவல் எதிரொலி | தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் சமீப காலமாக நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்ட மலப்புரம் பகுதியில் மத்திய சுகாதார துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகளில் அம்மாநில அரசுகள்
தீவிர சோதனையில் இறங்கியுள்ளன.
அதன்படி, தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையான புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சோதனை சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களும், வாகனங்களும் முறையான சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், தற்போது அரிய வகை பழங்களான ரம்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களின்
சீசன் காலம் என்பதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஏராளமான வாகனங்களில் இப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சூழலில், தென்காசியில் தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினரின் முழுமையான சோதனைக்கு பிறகே பழங்களை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால், இவ்வாறு கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் பழங்களில் வெளவால்கள் கடித்து சேதம் அடைந்த பழங்கள் ஏதேனும் இருந்தால் அந்த வாகனத்தை சுகாதாரத் துறையினர் திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர்.