எதிர்த்து யாரும் போட்டியிடாத போதும் தோல்வியைத் தழுவிய நிக்கி ஹாலே! அமெ. குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ருசிகரம்!
அமெரிக்க குடியரசு காட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, தன்னை எதிர்த்து யாரும் போட்டியிடாத போதும் தோல்வியை தழுவினார்.
அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்கு மாகாணங்கள்தோறும் தேர்வு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
அதனடிப்படையில் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேரந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் மற்றும் பலர் களத்தில் இருந்தனர். அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி தெரிவித்தார்.