“#NIA ஆய்வு மடைமாற்றும் வேலை” - எம்பி சசிகாந்த் செந்தில்!
“NIA சோதனை என்பது மத்திய அரசின் மடைமாற்றும் வேலை” என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578), நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. ஆனால் இதனால் 4 தண்டவாளங்கள் சேதமடைந்து, மற்ற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து நிகழ்விடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் இதில் NIA சோதனைக்கு எந்த அவசியமும் இல்லை எனவும், இது மக்களை மடைமாற்றும் ஒரு வழிதான் எனவும் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர் இது குறித்து கூறியதாவது:
“இந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே துறை இதை புரிந்துகொள்ள வேண்டும் என முன்னரே கூறினேன். ரயில்வே ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை முன்வைத்தோம். எதையும் இந்த அரசு பொருட்படுத்தவில்லை. NIA சோதனைக்கு எந்த அவசியமும் இல்லை. மடைமாற்றத்தின் ஒரு வழி தான் இது. மக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் பேச்சை ரயில்வே துறை கேட்டால் போதும். உள்ளூர் மக்களின் உதவியால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன.
மத்திய அரசு மடைமாற்றத்தை விடுத்து மக்களுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து தர வேண்டும். இது தொழில்நுட்பக் கோளாறா? என்பதை தாண்டி நிர்வாக அலட்சியம் என்றே கூற வேண்டும். ரயில்வே ஊழியர்கள் 6 மாத காலமாக போராட்டத்தில் உள்ளனர். அவர்களே ஓய்வும் எடுத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற அடிப்படை தேவைகளில் அலட்சியம் என்னும் போது கேள்வி எழுப்பப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறோம்”
இவ்வாறு காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.