நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதற்காக 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (16.02.2024) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.
"இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.
செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸ்எல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜிஎஸ்எல்வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.