நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி - மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர சீமான் கோரிக்கை.!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை , நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மணிமுத்தாறு முதல் குதிரை வெட்டி கோதையாறு என்று மலை உச்சத்திற்குச் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்பட்டது.
கடந்த வாரம் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை, 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலையை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்துவிட்டது. இதனையடுத்து, சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த மலைக்கிராம மக்களின் சிரமங்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு, அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது. அதன் எதிரொலியாகப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான முதற்கட்ட அடிப்படை பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது.
நியூஸ் 7 தமிழின் கள ஆய்வு மற்றும் அது தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெறத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளதாவது..
10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்த மணிமுத்தாற்றிலிருந்து மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முற்று முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலிருந்து மாஞ்சோலை மலைப்பகுதி துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டுள்ளதால், மாஞ்சோலை பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என அனைத்துத்தரப்பு பொதுமக்களும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவதியுற்று வருவதுடன் தேயிலைத் தோட்டப் பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
மேலும், வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஒரே ஒரு வாகனத்தில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதிலும் எளிய மக்களால் பயணிக்க முடியவில்லை. மாஞ்சோலை மலைச்சாலையைச் சீரமைக்கக்கோரி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், வனத்துறையைக் கைகாட்டி தங்கள் பொறுப்பினைத் தட்டிக்கழிக்கின்றனர்.
வனத்துறையை அணுகினாலோ அவர்கள் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்று அலட்சியப்படுத்துகின்றனர். அடிப்படை வசதி கோரிய மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால் செய்வதறியாது தவித்துப்போயுள்ளனர். சாலையைச் செப்பனிட்டு போக்குவரத்தைச் சரிசெய்து கொடுத்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் பலமுறை மனு அளித்தும் மக்களின் துன்பத்தை வேடிக்கைப் பார்ப்பதென்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுமையாகும் ஆகவே, தமிழ்நாடு அரசு மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து விரைந்து பேருந்து வசதியைச் சரிசெய்துகொடுத்து மாஞ்சோலை மக்களின் துயர் தீர்க்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என சீமான் தெரிவித்தார்.