ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ - ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்து 3 நாட்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாத்து சிறப்பான பணி செய்த ரயில் நிலைய மேலாளர் ஜவ்பர் அலிக்கு நியூஸ் 7 தமிழ் நிறுவனம் 'தன்னலமில்லா தலைமகன்' விருது வழங்கி சிறப்பித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டது. தென் மாவட்டங்களில் அதீத கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டதால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் சேதமடைந்ததால், அந்த ரயில் எந்த பக்கமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், 3 நாட்களாக ஒரே இடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் உணவு, குடிநீர் இன்றி சிக்கித் தவித்தனர். பின்னர் அங்கிருந்து முதற்கட்டமாக 150 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டிருந்த பயணிகளுக்கு அருகில் இருந்த புதுப்பட்டி, ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்து வந்து அங்கேயே சமைத்து அவர்களுக்கு உணவு அளித்து வந்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களாக அரசு நடவடிக்கைகள் எடுத்து பயணிகளை மீட்டது. மேலும் நேற்று முன்தினம் ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில் சிறப்பு ரயில் மூலம் வழக்கமாக செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் பாதை வழியாக பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.