நியூஸ் 7 செய்தி எதிரொலி! குவைத்தில் சிக்கிய திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை மீட்ட இந்திய தூதரக அதிகாரிகள்...
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூரை சேர்ந்தவர் யோக மகேஸ்வரி. இவர் வீட்டு வேலைக்காக குவைத் நாட்டுக்குச் சென்றுள்ளார். 14 மாதங்களுக்கும் மேலாக மகேஸ்வரி அங்கு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தான் வேலை செய்து வரும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், உடனடியாக தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், “குவைத்திற்கு வீட்டு வேலைக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது. மொழி தெரியவில்லை என்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசி என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். நெருங்கிய உறவினர் இறப்புக்கு கூட ஊருக்கு அனுப்ப முடியாது என கூறிவிட்டார்கள். 305 தினார் கொடுத்து விட்டு ஊருக்கு போ என்று கூறுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.
குவைத்திலிருந்து என்னால் வேலை செய்ய முடியவில்லை. என்னை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப உதவுங்கள். எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. நான் இல்லாமல் என் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னை தாயகத்திற்கு அழைத்து செல்ல உதவி செய்யுங்கள்” என்று மகேஸ்வரி பேசியிருந்தர்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியானது. இதனையடுத்து யோகமகேஸ்வரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
குவைத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காகக் கனிமொழி அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராச்சாமி, திமுக அயலக அணியின் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, யோக மகேஸ்வரியை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
குவைத்தில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் தூதராக அதிகாரிகளுடன் கனிமொழி விவாதித்தார். இதையடுத்து, யோக மகேஸ்வரியை விரைவில் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தூதரக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
இந்நிலையில், யோக மகேஸ்வரி பணி புரிந்த வீட்டிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் அவரை மீட்டனர். தற்பொழுது யோக மகேஸ்வரி இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். யோக மகேஸ்வரி வேலை பார்த்த வீட்டு உரிமையாளரிடம் இருந்து பாஸ்போர்ட்டை பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் பெற்றவுடன் ஒரிரு நாளில் யோக மகேஸ்வரி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.