புத்தாண்டு 2024 - வழிபாடு தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி வருகிறது. அதே போன்று இந்தாண்டும் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : விண்ணில் பாய்ந்தது PSLV C58! சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது!
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் நாமநாதசுவாமி கோயிலிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் ஏராளாமான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.
இதனிடையே 2024ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தைக் காண குமரி திரிவேணி சங்கமம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதே போல் 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.