மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தில் புதிய திருப்பம் - விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார்!
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விக்னேஷின் தாயார் மற்றும் சகோதரர் மீது தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
முதலமைச்சர் தொடங்கி அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க, மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனக்கோரி அரசு மருத்துவர்கள், செலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜிக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நலம் தேறியுள்ளார். அதேசமயம், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷை கைது செய்த காவல்துறை, அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாய் பிரேமா, மருத்துவர் பாலாஜி மீது புகார் ஒன்றையும் கிண்டி காவல் நிலையத்தில் அளித்தார். இந்த புகார் மனுவை விக்னேஷின் தம்பி லோகேஷ் காவல் நிலையத்தில் அளித்தார். மேலும் விக்னேஷ் செய்தது தவறுதான் எனக்கூறிய அவரது குடும்பத்தினர், “இங்கு அனைவரும் மருத்துவர் நிலை குறித்து மட்டுமே பேசுகிறார்கள். எங்கள் நிலை குறித்து யாரும் பேசவில்லை. ஊடகங்களை தவிர யாரும் வந்து எங்களை பார்க்கவில்லை” என தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் புதிய திருப்பமாக, விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளார். தனியார் மருத்துவர் ஜேக்கலின் கூறிய கருத்தை தொடர்ந்து, அரசு மருத்துவர் பாலாஜியை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை எடுக்குமாறு நுரையீரல் சிகிச்சை அளித்த மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால்தான், பிரேமாவின் நிலைமை மோசமடைந்ததாக தனியார் மருத்துவமனை கூறியதால், கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறிய நிலையில், தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.