“அனைத்துக் கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது” - கிருஷ்ணசாமி!
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“முதலமைச்சர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது. தொகுதி மறுவரையரை ஆணையம் ஒன்று உருவாக்கபடாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் ஒரு பீதியை மக்களிடத்தில் கிளப்புகிறார்.
மத்திய அரசு தமிழ்நாடு உரிமையை பறிக்கிறது போன்ற கருத்தை உருவாக்கி, 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நப்பாசை காரணமாக தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டியது தானே?
10, 15 வருடம் கழித்து மொழியே இல்லாமல் போய்விடும். AI மிக வேகமாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞான ரீதியில் மாணவர்களை ஆயத்தம் செய்ய வேண்டும். எத்தனை மொழியை கற்க வேண்டும், எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டியது பெற்றோர்கள், குழந்தைகள்தான்.
திமுக வீட்டு பிள்ளைகள் எல்லாம் இரு மொழிக் கொள்கை தான் கற்கிறார்கள் என்று முரசொலியில் முதலமைச்சர் வெளியிட தயாரா?. மொழியை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை என்றுதான், தொகுதி வரையறை பிரச்சனையை பேசி வருகிறார்கள். முதலமைச்சர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.