'சிம் கார்டு' வாங்க புதிய விதிகள் அமல்!
சிம் கார்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
கைப்பேசிகளுக்கான சிம் கார்டுகளை வாங்குவதற்கான புதிய விதிகள் வெள்ளிக்கிழமை (டிச.1) முதல் அமலுக்கு வந்தன. இதன்படி எண்ம முறையில் கேஒய்சி (வாடிக்கையாளர் விவரப் படிவம்) விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாகும். ஏற்கெனவே உள்ள சிம் கார்டுக்கு பதிலாக புதிய கார்டு வாங்கினாலும் இந்த நடைமுறை பொருந்தும். மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக சிம் கார்டுகளை வாங்கும் போது, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும். வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகளில் இருந்து பணத்தை பறிக்கும் மோசடியாளர்கள் கைப்பேசிகள் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் கைகளில் சிம் கார்டுகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
ஒரு கைப்பேசி எண் கைவிடப்பட்டால், அதே எண் 90 நாள்களுக்குப் பிறகுதான மற்றொரு நபருக்கு வழங்கப்படும். ஒருவர் ஒரு அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் கார்டுகளை வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களிடம் இருந்து சிம் கார்டுகளை வாங்கி விற்பனை செய்யும் முகவர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் தொடர்பான விவரங்களை முழுமையாகப் பெற்றுக் கொண்டு அவற்றை சரி பார்க்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிம் கார்டு விற்பனை செய்வோரிடம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் முகவர்கள் மூலம் தான் மோசடியாளர்களுக்கு அதிகஅளவில் சிம் கார்டுகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.