ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையா? ஐஆர்சிடிசி விளக்கம்!
ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என பரவிய தகவல் உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி மறுத்துள்ளது.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் விலை குறைவு என்பதாலும், வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள்.
இதனிடையே, ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என தகவல் பரவியது. தற்போது இந்த தகவலை ஐஆர் சிடிசி மறுத்துள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறும்போது, "வேறுபட்ட துணை பெயர்களில் டிக்கெட் புக்கிங்க் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக பரவும் தகவல் போலியானது. தனிப்பட்ட யூசர் ஐடியில் ஒருவர் தனது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும்.
ஒரு மாததத்தில் 12 டிக்கெட்டுகள் வரை ஒரு பயனர் புக்கிங்க் செய்து கொள்ளலாம். ஆதார் பதிவுடன் இருந்தால் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்ய முடியும். தனிப்பட்ட பெர்சனல் ஐடியில் புக் செய்யும் டிக்கெடுகளை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த கூடாது. இத்தகைய செயலில் ஈடுபடுவது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 143 கீழ் குற்றமாகும்" என்று தெரிவித்துள்ளது.