தமிழ்நாட்டிற்கு வரப்போகும் புதிய EV ஆலை! - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் வியட்நாம் நாட்டின் EV நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த நிலையில், தற்போது முக்கியமான திட்டத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் வின்ஃபாஸ்ட் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் வைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள் : நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்! பொருளாளர் கார்த்தி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் வின்பாஸ்ட் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலை அமைக்க எவ்வளவு முதலீடு செய்யப்போகிறது என்ற தகவல் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஃபோர்டு நிலத்தை விற்கத் தயாராக இல்லாததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. அதன் பிறகு கடல் மற்றும் வான்வழி வசதியுள்ளதால்,அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த முதலீட்டை தூத்துக்குடி மாவட்டதிற்கு மாற்றுவதற்கான பொறுப்பை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் கடந்த அக்டோபர் மாதம் முதல் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், அவர் சமீபத்தில் ஒரு சிறிய குழுவுடன் வியட்நாமுக்கு சென்றார். அங்கு நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து, அக்குழுவுடன் இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, வின்ஃபாஸ்ட் தூத்துக்குடியில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.