ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர் - யார் இந்த சம்பாய் சோரன்..?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள சம்பாய் சோரனின் பின்னணி மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
ஆட்சி மாற்றங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்க்கண்டின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். யார் இந்த சம்பாய் சோரன்? அவரின் பின்னணிதான் என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே நில சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அவ்வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்து அதிரடி காட்டியது.
ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்தபோதே, கட்சிக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும், பலதரப்பட்ட குழப்பங்களும் ஏற்பட்டது. அப்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் அக்கட்சி நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு கட்டத்தில் மக்கள் அளித்த பேராதரவுடன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சம்பாய் சோரன், சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். பெரிய வாக்கு வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றிகண்ட சம்பாய் சோரன், முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன்பிறகு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட சம்பாய் சோரன், அக்கட்சியில் தனது தகுதியை படிப்படியாக வளர்த்துக்கொண்டு மூத்த தலைவராக உருவெடுத்தார்.
இதையும் படியுங்கள் : “பீகாரில் 5 மணி நேரத்தில் ஆட்சி அமைந்தது... ஜார்க்கண்டில் 22 மணி நேரமாகியும் தகவல் இல்லை...” - மஹுவா மாஜி குற்றச்சாட்டு