எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம்... புதிய பயனர்களுக்கு கட்டணம்!
‘எக்ஸ்’ வலைதளத்தில் இணையும் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தாா்.
கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என மாற்றினார். இதனைத் தொடர்ந்து, தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்த பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ‘எக்ஸ்’ வலைதளத்தில் இணையும் புதிய பயனா்களுக்கு வருடாந்திர கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தாா். அதன்படி, பதிவுகளை பதிவிடுவதற்கும், பதிவுகளை ‘லைக்’ செய்வதற்கும், பதிவுகளை சேமித்து வைப்பதற்கும், பதிவுகளுக்குப் பதிலளிப்பதற்கும் புதிய பயனா்கள் சிறிய வருடாந்திரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வலைதளத்தைப் பயன்படுத்தவும், கணக்குகளைப் பின்தொடரவும் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்துவற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, வலைதளத்தின் அனைத்து வழக்கமான அம்சங்களையும் புதிய பயனா்கள் இலவசமாகப் பயன்படுத்த முடியும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்தார்.