டெல்லியில் புதிய அதிமுக அலுவலகம்... பிப்.10-ல் திறந்து வைக்கிறார் இபிஎஸ்!
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் வரும் 10-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தபடி கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் அதிமுக எம்பிக்கள் இந்த அலுவலகத்தில் தங்குவார்கள் என கூறப்படுகிறது.
அதே போல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க செல்லும் போதும் இந்த அலுவலகத்தில் தங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.