நேபாளம் இளைஞர்கள் போராட்டம் எதிரொலி - விவசாயத் துறை அமைச்சர் ராஜினாமா!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் நாள் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்பட 26 செயலிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் நேபாளத்தின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இப்போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஓலியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "மக்கள் ஜனநாயகத்தை கேள்வி கேட்கும் இயல்பான உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, பரவலான அடக்குமுறைகள், கொலைகள் மற்றும் கட்டாயத்தைப் பயன்படுத்தி, நாட்டை ஜனநாயகத்திற்கு பதிலாக அதிகாரமையமாக மாற்றியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.