நேபாளம்: விமான விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் வீடியோ!
நேபாளத்தில் ஓடுதளத்தில் இருந்து பறக்க முயன்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருபுவன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் பைலட், விமான நிலைய ஊழியர்கள் உட்பட்ட 19 பேருடன் தனியார் நிறுவன விமானம் போக்காரா நகருக்கு புறப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் இருந்து மேல் எழ முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தை விட்டு வெளியே சென்று விபத்தில் சிக்கியது.
ஓடுதளத்தின் மேல் எழுந்த விமானத்தின் ஒரு பக்க இறக்கை ஓடுதளத்தில் உரசிய நிலையில், ஒருசில நொடிகளிலேயே முழுவதுமாக பற்றி எரிந்தது. சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தால் அந்த இடம் முழுவதுமே கரும்புகையால் சூழ்ந்தது. இதில், விமானத்தில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். விமானி ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான பதை பதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதற வைத்துள்ளன. நேபாள ராணுவத்தினர் சம்பவ இடத்தில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
நேபாளத்தில் காத்மாண்டுவில் அடிக்கடி விமான விபத்துகள் நடந்து வருகின்றன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து என்ற வாக்கில் விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில், 1992ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 167 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே அபாயகரமான விமான நிலையங்களில் ஒன்றாகவும், பாதுகாப்பற்ற விமான நிலையமாகவும் திருபுவன் சர்வதேச விமான நிலையம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.