நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் - நாகை மாலியின் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!
நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் உறுப்பினர் நாகை மாலியின் தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டப்பேரவை இன்று காலை 9:30மணிக்கு தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறளை வாசித்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவை தொடங்கிய உடனே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் கத்தி கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நாகை மாலி பேசியதாவது..
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை முறையாக நடந்து கொள்ளவில்லை. இந்த சம்பத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், முக்கியமானவர்களின் தொலைபேசி எண்களை கண்காணிக்க வேண்டும். மாவட்டச் செயலாளருக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக, அக் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள கொண்டுவருவதைவிட, சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் காவல் சரகம், புதுக்கூரைப்பேட்டையில் 8.7.2003 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கடந்த 29.2.2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது நமது இலக்கு சற்று தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இன்று சந்தித்து வரும் சமூகரீதியிலான பிரச்சினைகளை, அதன் விளைவுகளை இங்கே பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப்போல உடனடியாக எதிர்கொள்ளவும், அதற்கொரு தனி முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, உறுப்பினர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இக்குற்றங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள், அவை அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து, அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்து அமைகின்றேன்..
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.