Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோலாகலமாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

10:06 AM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்.  இக்கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆனிமாதம் நடைபெறும் பெருந்திருவிழா புகழ் பெற்றதாகும்.  அத்தகைய ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினமும் சிறப்பு பூஜைகள்,  காலை மற்றும் இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.  இதில், இன்று காலையில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து,  சுப்பிரமணியர், விநாயகர் தேர்கள் இழுக்கப்பட்டன. அதன்பின்னே அம்பாள் தேரும்,  சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் திரண்டனர்.  தேர் திருவிழாவை முன்னிட்டு ரதவீதிகள் மற்றும் டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சிறு வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 1,500 போலீசார், ஊர்க்காவல் படையினர் நேற்று இரவே பாதுகாப்பு பணியை தொடங்கினார்கள்.  நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி,  துணை கமிஷனர்கள் ஆதர்ஷ் பச்சேரா, கீதா ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் தேர் செல்லும் போது தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் நாலாபுறமும் காட்சிகளை பதிவு செய்யும் உயர்ரக கேமராக்களை கொண்ட வாகனமும் உடன் செல்கிறது. இதுதவிர மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தற்காலிக கழிப்பறை வாகனமும் நிறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ உதவி, சிகிச்சைக்கும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

தேரோட்டத்தையொட்டி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்,  நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags :
Bakthicar festivaldevoteesNellaiyapar TempleTherottam
Advertisement
Next Article