#Nellai | திசையன்விளை புனித சவேரியார் ஆலய தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரம் புனித
சவேரியார் ஆலய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பிரசித்தி பெற்ற ரம்மதபுரம் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 23 தேதி மாலை அருட்தந்தை செல்வரத்தினம்
தலைமையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து, தினமும் விழா நாட்களில் ஆலயத்தில் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி மாலையில் மறையுரை, நற்கருணை, ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து 9ம் திருவிழாவான நேற்று மாலை ஜேசுராஜ், வெனி இளங்குமரன் தலைமையில் திருவிழாமாலை ஆராதனை நடைபெற்றது. இவ்விழாவின் சிகரநிகழ்ச்சியான தேரோட்டம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபற்றது. புனித சவேரியார் தேரில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் உப்பு, மிளகு தூவியும், பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஜெபித்தும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.