முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் - தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்!
முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே வேளையில், நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்ததது.
“ நீட் தேர்வுகளை நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. தேர்வின் முடிவுகள் மகாராஷ்டிரா மாணவர்கள் இம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும். இந்த நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தேவைப்பட்டால் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு (NMC) இந்த விஷயத்தை தெளிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.