முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!
தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை தேர்வறைகளில் பொருத்த யுபிஎஸ்சி தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசால் நடத்தப்படும் நீட், நெட் போன்ற தேர்வுகளில் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து யுபிஎஸ்சி இந்த முடிவை எடுத்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் உள்பட 14 முக்கியத் தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. மத்திய அரசின் குருப் ஏ, குருப் பி, ஆகிய பணிகளுக்கான நியமனத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் முறைகேடுகளை தடுக்கவும் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தேர்வர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக்கொண்ட விரல்ரேகைப் பதிவு, முக அங்கீகாரம் தொழில்நுட்பம், நுழைவுச் சீட்டில் உள்ள 'க்யூர்ஆர்' குறியீடு சரிபார்ப்பு, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பங்களை தேர்வுகளில் யுபிஎஸ்சி பயன்படுத்தவுள்ளது. இந்த தொழில்நுட்பங்களை வடிவமைப்பதற்கு அனுபவமிக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏலத்தில் பங்கேற்க ஆணையம் அண்மையில் அழைப்பு விடுத்தது.
இதையும் படியுங்கள் : ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் - ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!
தேர்வர்கள் தங்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களுடன் தேர்வு நடைபெறும் நாளில் புதிதாக முக அங்கீகார தொழில்நுட்பத்தால் எடுக்கப்படும் புகைப்படங்கள் ஒப்பீடு செய்யப்படவுள்ளது. ஒரு தேர்வறைக்கு 24 தேர்வர்கள் அமரும் வகையில் வசதிகள் செய்யப்படவுள்ளன. தேர்வு மையம், தேர்வு அறையின் நுழைவாயில் மற்றும் பிற வாயில்கள், கட்டுப்பாட்டு அறைகளில் வண்ண சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளன.
தேர்வு அறைகளில் தேர்வர்கள் அமரும் நாற்காலிகள் அல்லது பிற இருக்கைகள் சரியாக வரிசைப்படுத்தப்படாமல் இருந்தாலோ அல்லது தேர்வு தொடங்கும் முன்பும் முடியும் முன்பும் சந்தேகப்படும்படியான நடமாட்டங்கள் இருந்தால் ஏஐ கேமராக்கள் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்குமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு சீர்திருத்த தொழில்நுட்ப நடைமுறைகளை செயல்படுத்த விரும்பும் நிறுவனங்களிடம் ஏல விண்ணப்பங்கள் ஜூலை 7-ஆம் தேதி பிற்பகல் 1 மணிவரை பெறப்படுகின்றன. அதே தினத்தில் ஏலமும் நடைபெறும் எனவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.