“நீட் தேர்வு முறைகேடானது” - அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்து கேரள காங்கிரஸ் கண்டனம்!
12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றது எவ்வாறு சாத்தியமானது என்று கேரள காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில், 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது என்று கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அனிதாவின் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இணைத்து கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மாணவியான அனிதா 12ம் வகுப்பில் 1200 க்கு 1176 மதிப்பெண்கள் (98%) எடுத்தும் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
அனிதா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பெண். சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அனிதா, 12ம் வகுப்பு வரை தனது பள்ளியில் எப்போதும் முதலிடத்தில் இருந்தார். 2017ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், தமிழ்நாட்டில் மருத்துவச் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அவரும் 1176/1200 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
இதையும் படியுங்கள் : மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!
இது தொடர்பாக கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது :
"98 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. ஆனால், 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது. நீட் தேர்வு முறைகேடானது. மேலும், உச்சநீதிமன்றம் அனிதாவின் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் அனிதா ஒரு தியாகி"
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர்.