Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல” - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:55 PM Apr 09, 2025 IST | Web Editor
Advertisement

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர திரௌபதி மூர்மு நிராகரித்ததை தொடர்ந்து, இன்று(ஏப்ரல்.09) சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வில்சன்(திமுக) ராஜேஷ், பழனிநாடார் (காங்கிரஸ்) சதன் திருமலைகுமார் மற்றும் பூமிநாதன் (மதிமுக), தளி ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து (சிபிஐ), நாகைமாலிக் மற்றும் சின்னதுரை (சிபிஎம்), ஜி.கே.மணி (பாமக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன்(கொமதேக), வேல்முருகன் (தாவாக) ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிதாவது, “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாக நுழைத்தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடியது. அதனால் அதைத் தவிர்த்து பள்ளி கல்வித் திறனை மட்டும் அடிப்படையாக கொண்டு கல்வி மாணவர் சேர்க்கை அமையும் என்பதில் அசைக்க முடியாத உறுதிகொண்டதாக நமது அரசு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில அளவில் நடந்துகொண்டிருந்த நுழைவுத் தேர்வுகளை 2006ஆம் ஆண்டு அதற்கான தனி சட்டம் இயற்றி அகற்றினார். அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று, கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுடைய நலன் காக்கும்படி உறுதி செய்தார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து, திறன்மிக்க மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு நம்முடைய மாணவர்களுக்கு கிடைத்தது. அந்த மருத்துவர்கள் மூலமாகத்தான் மருத்துவத்துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கான திருத்தச்சட்டம், அதன் பின்பு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவமனைச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் , எப்படி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்தது.

நுழைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கான வசதி வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. அதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் போராடுகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  2021 ஆம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கினோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க, ஓய்வு பெற்ற நீதி அரசர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்தோம்.

சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்களின் மருத்துவ கனவுக்கு பெரும் இடையூறாகவும் சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்து இருப்பவர்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் இருக்கிற பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது என அந்த குழு தெரிவித்தது. எனவே 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற அந்த குழு பரிந்துரை செய்தது. அந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள  அமைக்கப்பட்ட அரசு சார்பில் நீட் விலக்கு கொண்டுவர பரிந்துரைத்தது.

அதன் தொடர்ச்சியாக  நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை  13.09.2021 அன்று நான் முன்மொழிந்தேன். அதை சட்டமாக்க ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தனது கடமையை செய்யாமல் அரசியல் செய்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். அதன் பின்பு நாமும் சலைக்காமல் அந்த நீட் விலக்கு சட்டத்தை கொண்டுவர கடுமையாக போராடினோம்.

இந்தநிலையில் 1.02.2022 அன்று அவர் திருப்பி அனுப்பினார். உடனடியாக 5.02.2022 அன்று இதே மாதிரியான ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். அப்போது மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினோம். அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில்  நீட் விலக்கு வேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,   8.02.2022 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பின்பு பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை வலியுறுத்தினேன்.

அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு  நேரடியாக சென்று மனு அளித்தார்கள். அடுத்தகட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி நீட் ரத்து சட்டம் கொண்டுவருவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை, உயர் கல்வித்துறை என பல்வேறு துறைகளில் இருக்கும் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்காமல் நம் மாணவர்களுக்கு  பெரும் பேரடியாக மத்திய அரசு, நம் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வேதனையுடன் நான் தெரிவித்தேன்.

மத்திய அரசு நம் கோரிக்கைகளை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டம் எந்த வகையிலும் முடிந்துபோகவில்லை என்பதையும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். நீட் தேர்வு விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நன்மைக்காக யாரோ தங்களின் சுயநல நன்மைக்காக மத்திய அரசை தவறாக பயன்படுத்தி நடத்தும் தேர்வு இந்த நீட். அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருகிறது. நேற்று உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. நம் சட்டபோராட்டத்தை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தினால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKentrance examMKStalinneet exam
Advertisement
Next Article