நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBI
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின. நீட் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. ஒவ்வொரு நாளும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு : டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசு சிபிஐயிடம் உத்தரவிட்ட நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக சிபிஐ முதல் எப்ஐஆர் பதிவு செய்தது. இதனையடுத்து முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.